பள்ளியின் வரலாறு
இந்திய சுதந்திரப் போரில் பள்ளியின் பங்கு:
1930 இல் காந்தியடிகள் உப்புசத்தியாக்கிரகப் போராட்டத்தை அறிவித்து தண்டி யாத்திரை மேற்கொண்டார். அதனை ஒட்டி சென்னை, தமிழகத்தில் இராஜாஜி தலைமையில் உப்புசத்தியாக்கிரகப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. இராஜாஜியுடன் சுதந்திரப் போராட்ட வீரர்கள் திருச்சியிலிருந்து வேதாரண்யம் நோக்கிச் சென்று இருந்தனர். பிரிட்டீஷ் அரசாங்கத்தால் தாம் கைது செய்யப்படுவோம் எனக்கருதி அவர்கள் ஆறங்கரை வழியே சென்றனர். இரவு நேரத்தில் போராட்ட வீரர்களைப் பள்ளிக்கு அழைத்து தங்க இடமளித்துப் பாதுகாப்பு வழங்கப்பட்டது. இரவு குடமுருட்டி ஆற்றில் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
அக்கூட்டத்தில் சுதந்திரப்போராட்ட வீரர்கள் எழுச்சியுரை ஆற்றினர். இதற்குப் பள்ளிநிர்வாகம் தேவையான ஒத்துழைப்பை நல்கியது 18.4.1986 இல் உப்புச்சத்தியாக்கிரகப் போராட்டத்தை நினைவுகூறும் வகையில் பொன்விழாவினை இந்திய அரசும் தமிழ்நாடு அரசும் நாடெங்கும் நடத்தியது. அப்போது நூற்றுக்கும் மேற்பட்ட தியாகிகள் வழுத்தூர் வழியாக வேதாரண்யம் நோக்கிச் சென்றனர்.
அவ்வேளையில் அந்த தியாகிகளையெல்லாம் வழுத்தூர் எல்லையில் வரவேற்று, உபசரித்து, அவர்களை ஆரம்பப் பள்ளிக்கு அழைத்துவந்து நம் பள்ளி நிர்வாகம் கெளரவப்படுத்தியது. அன்றைய தினம் தஞ்சை மாவட்ட ஆட்சியர் M.ராமு IAS அவர்கள் தலைமையில் உப்புசத்தியாக்கிரகப் பொன் விழா ஆரம்பப்பள்ளியில் கொண்டாடப்பட்டது. அவ்விழாவில் பள்ளி நிர்வாகிகளும், பொதுமக்களும், பள்ளிஆசிரியர்களும், மாணவ மாணவிகளும் கலந்து சிறப்பித்தனர். அன்று இரவு தியாகிகள் அனைவரும் ஆரம்பப்பள்ளி வளாகத்தில் தங்கவைக்கப்பட்டனர். அவர்கள் இரவில் விடுதலைப் போராட்டம் பற்றிய நிகழ்வுகளைக் கலைநிகழ்ச்சியாக நடத்திக் காட்டினர். மறுநாள் காலை 19-4-1988 அன்று அவர்களை தம்முடைய நிர்வாகம் வேதாரண்யத்திற்கு வழி அனுப்பிவைத்தது. இந்நிகழ்வு நம் பள்ளி வரலாற்றில் ஒரு மைல் கல்லாக அமைந்தது.
1930 இல் இப்பள்ளி நடுநிலைப் பள்ளியாக இருந்தது அன்றை பள்ளி நிர்வாகத்தினரும் ஊர்ப் பொதுமக்களும் விடுதலைப்போரில் முழுமனத்துடன் தங்களை ஈடுபடுத்திக்கொண்டனர்.
Key Dates & Checkpoints
- பாலிய முஸ்லிம் சங்கம் தொடங்கிய ஆண்டு : 1915
- சௌக்கத்துல் இஸ்லாம் ஆரம்பப்பள்ளி தொடங்கிய ஆண்டு : 1917
- ஆரம்பப் பள்ளிக்கு அங்கீகாரம் வழங்கிய நாள்/ எண் : 13.09.1919/125TD
- நடுநிலைப் பள்ளி தொடங்கிய ஆண்டு : 1922
